ஆண்டவனின் இரண்டாம்
அவதாரம் அம்மா!!!
விழி திறந்த போது நான் கண்ட முதல் விம்பம்.
விழி மூடும் போது தான் புரிந்தேன்
உன் தியாகம்.
காற்றில்லாமல் உன்னுள் நான் வாழ்ந்த போதும் கூட
தோற்றுவிடவில்லை நான்
என் வாழ்வில்.
சுமைகளைக்கூட சுகமெனச்
சுமந்திடுவாள்.
வலியைக்கூட கிலி இன்றி
விலகச்செய்வாள்.
ஆராரோ தாய் பாடிய போதெல்லாம்
ஆயிரம் கைகள் எனை அணைத்த ஆத்மம்.
அன்னநடை தான் பயின்று
செல்லநடை எனக்கு பயின்றவள்.
என் பசி தீர்த்த நிறைவில்
தன் பசி ஆறியவள்.
காத தூரம் நான் நடந்தாலும்
பாதம் நோகுமே என எனைத் தாங்கிடுவாள்.
தலைவாரித் தூங்க வைப்பாள்
தலையணை இன்றித் தான்
தூங்கிடுவாள்.
ஓடித்திரிந்துடுவாள் குழந்தைபோல – அறுபதிலும்
ஒலிக்கும் என் குரல் கேட்ட போதெல்லாம்.
மன்மதனே வந்தாலும் தன்
மகனின் அழகுக்கு பின்னே என்று மார்பு தட்டிப் பெருமிதம் கொள்வாள்.
ஊரிலுள்ள வெற்றி எல்லாம் தன் மகனிடம் வந்து சேர
உரக்கச் சொல்லிப் பெருமைப்பட வேண்டிக்கொள்பவள்.
மாற்றார் மனம் நோகமல் வாழ எண்ணி
தோற்றாய் உன் வாழ்வில் நீ.
அரங்கிலே ஆயிரம் பேர் இருந்தாலும்.
அழகான உன் விழிகள் நோக்குவது எனை மட்டுமே.
விழி திறந்து பார்த்திருப்பாள்
விடியும் வரை ஆனாலும் என் வரவிற்க்காக.
விருப்பு வெறுப்பு என்பது அவளுக்கு.
விளங்காமலே இருந்தது எப்போதும்.
மன்னிப்பு என்பது தாயின் மறு வார்த்தை.
தண்டனை என்பது தடை செய்யப்பட்ட விடயம்.
புன்னகை என்பதை
பொன்னகையாச் சுமந்தவள்.
புத்திரன் என்பது பத்திரமாக காத்தவள்.
அம்மா என்றேன் ஆபத்தில் கூட
ஆண்டவனே உனை நம்பு என்றார்
அமிர்தம் என்றால் என்னவெனில்
அம்மா கையால் உண்ட சோறு.
யாரும் இல்லை என்று நான் நினைத்த போதெல்லாம்
யாவருமாய் நின்ற பெண் அவள்.
தன் சோகம் மறந்து
என் சுகத்தில் வாழ்பவள்.
தன் கனவு இழந்து
என் கனவைச் சுமந்திடுவாள்.
என் உலகம் வேறென்று உனக்குப்புரிந்தும்
உன் உலகம் நான் என்று வாழ்ந்தாய் நீயம்மா.
பாயில் அவள் படுத்து நான் பார்த்ததில்லை
படாய்ப்படும் நேரத்திலும் கூட.
காகம் கரையும் போதெல்லாம்
கடிதம் வருமென்று கணித்திடுவாள்.
கடந்து போன தபாற்க்காரன் தன்
கதவைத் தட்டானா என்று
கண்பிதிரக் காத்திருப்பாள்.
வாய்க்கரிசி போட என் மகன் வருவான் என்று
வாசலில் இறுதி மூச்சு வரை தவம்கிடப்பாள்.
விழி திறந்த போது நான் கண்ட முதல் விம்பம்.
விழி மூடும் போது தான் புரிந்தேன்
உன் தியாகம் !!!