நிரந்தனி இதுவரை காலமும் தன்னிடம் ஒளித்து வைத்திருந்த கலைத்திறனை வெளிப்படுத்தி இருந்தார். அந்த தமிழ் கவிதைகள் இப்போது இந்த இணையத்தளத்தின் மூலம் வெளிப்படுத்தி இன்னும் அவர் திறமைகளை வெளிப்படுத்த ஊக்கமூட்டுவோமாக.
இவரிடம் இன்னும் ஊர் கலைத்திறன் இருக்கின்றது வெகு விரைவாக வெளிக்கொண்டு வர இருக்கின்றோம்.
நிரந்தனியின் கவிதைகள்
மீண்டும் பள்ளிக்கு போக ஆசை…!!!
சின்னச்சின்ன கால் பதித்து சிட்டுக்குருவி போல…
பெற்றோரின் கைகோர்த்து கள்ளம் கபடம் இல்லாமல்
புதிய உலகத்துக்குள் நுழைந்த பாடசாலையின் அந்த முதல் நாள்…!
பற்பல புதிய முகங்கள்… அது முதல் நாள் மட்டுமே.
அடுத்த நாள் முதல்
ஆண் பெண் பிரிவு இன்றி
கை கோர்த்து சேர்ந்து விளையாடிய மழலைக்காலங்கள்….!
சீருடைய அணிந்து ஒழுக்கமாக பாடசாலை வந்து
கல்வியிலும் விளையாட்டிலும் ஆர்வம் காட்டிய
அந்த நாட்கள்…
ஓடியது நாட்கள் மட்டும் அல்ல. நாங்களும் வளர்ந்து கொண்டு போனோம்…!
ஏன் முடிந்தது என்று ஏங்கும் சில பாடங்கள்…
ஏன் இன்னும் முடியவில்லை தோன்றும் பல பாடங்கள்…!
படிப்பில் போட்டியாக இருந்தாலும்
பொறாமை இல்லாத மனது…
ஆசைகள் இருந்தாலும் அதைச்சொல்ல துணிவு இல்லாத வயது…
பட்டம் வைத்து திட்டு வாங்கி கொண்ட நினைவுகள்…
முட்டாள்கள் தினத்திற்கு மை தெளித்து மாட்டிக்கொண்ட கொடுமைகள்…
பூப்பிடிக்க ஓடி காயம் பட்ட அந்த நாட்கள்…
பாடசாலை வரும் போதும் போகும் போது வெள்ளம் கலக்கிய அந்த நினைவுகள்….!
வகுப்பறையில் பாடமும் கவனித்துக்கொண்டு மைதானத்தில் நடக்கும் cricket ஐயும் கடைக்கண்ணால்
ரசித்த நினைவுகள்…!
விளையாடி முடிக்காத பல இடைவேளைகள்..
மணி அடித்த பின்னர் தாமதமாக வகுப்புக்குள் நுழைந்த பல நாட்கள்…!
தாமதமாய் வகுப்புக்கு நுழைந்தாலும்
சாமத்தியமாய் அதை சமாளித்த திறமை…
வீட்டு வேலை செய்ய மறந்தாலும்
அதைக்காட்டிக் கொடுக்காத புத்தி சாமர்த்தியம்…!
தெரியாத கேள்விக்கு திருட்டு முழி முழித்த போதும்…
எமக்கு தெரிந்த கேள்வியை கேட்க மாட்டாரா என்று
ஏங்கிய பாழாப்போன மனம்…!
உயிருக்கு ஆபத்தான கலவர சூழலிலும்
பயம் இல்லாமல் கர்த்தாள் ஊர்வலத்தில் பங்கு கொண்ட அதீர துணிவு…!
வகுப்புகளுக்குள் ஏட்டிக்கு போட்டியாய் நடத்திய விஜயதசமி விழா..
அழகான உடை அணிந்து வலம் வர ஆசையுடன் …
அடுத்த விஜயதசமி எப்ப வரும் என்று காத்து இருந்த பல இதயங்கள்…!
எங்கள் வகுப்புத்தான் வெல்ல வேண்டும் என்று கஷ்ட பட்டு துப்பரவு ஆக்கிய சிரமதான வாரம்…
வீட்டில் இருந்து அலங்காரப்பொருட்களை கொண்டு வந்து அதை வைத்து அலங்கரித்து பரிசு வென்ற மகிமை…!
மதியபோசண திட்டத்தில் கூடிச்சுவைத்த உணவு…
சங்கரப்பிள்ளை கன்ரீன் இல் இடி பட்டு வாங்கிய சாப்பாட்டு பார்சல்…!
பாவலர் தினவிழாவும் விளையாட்டுப்போட்டியும் எங்களுக்குள் இன்னும் ஒற்றுமையும் அன்பையும் வெளிப்படுத்தி பல மனதுகளை சேர்த்து வைத்த காலங்கள்…!
விளையாட்டில் பங்கு பற்றுவதை விட…
குளுக்கோஸ் சாப்பிடுவதற்கு இன்னும் கூடிய ஆர்வம்…!
இல்லங்கள் பிரித்த நாள் முதல் புதிதாக ஒரு உற்சாகம்…
பெருமையோடும் போட்டியோடும் எமது கழகத்துக்காக உழைத்து மாபெரும் வெற்றி ஈட்டிய குதூகலங்கள்…!
பாடசாலையின் கடைசி நாட்கள் நெருங்கிய போது…
ஏன் கடிகாரம் 11 வருட முன்னோக்கி செல்லாதா என்று ஏங்கிய பேராசை எல்லோர் மனதிலும் …!
சொல்ல நினைத்து சொல்லாமல் போன பல நினைவுகள்…
கானல் நீராகி போன பலபேரின் கனவுகள்…!
படித்து வாங்கிய பட்டம் கையில் சுமந்து கொண்டு பாடசாலை விட்டு நாங்கள் வெளியே வந்த போதும்……!
கல்லூரிக்காலத்தின் மறக்க முடியாத நினைவுகள்…!
மனதில் எங்கள் பிரிவை தாங்க முடியாத துயரம்…!
கன்னத்தின் ஓரத்தில் கண்ணீர்த்துளிகள் சாரையாக ஓடிக்கொண்டு இருந்தது……..!!!
**************************************************************************************************
விழியோரம் நான் வரைந்த கோடு!!
விழியோரம் நான் வரைந்த கோடு
அது புரியாமல் நீ விழித்ததேனோ..
இணையாத இருகோடு எனினும்
தடம் மாறிப்போக துணிந்ததேனோ..
மறுநாள் வாழாத மலராக இருந்தும்
மலர் தினம் மலராமல் போனது இல்லை..
நெடுதூரம் பறக்கும் பறவை
இளைப்பாற மரங்கள் இல்லை..
வழிமாறும் படகுகள் என்றோ
கரை சேராமல் விடுவதில்லை..
உன் விருப்பு நிறைவேறா அன்றில்
கிடைத்ததை விரும்பாதோ உன் மனம்..
இரண்டு மனம் எனக்கிருந்தால்
கலங்க மாட்டேன் உனை இழக்க..
ஆசைகள் எல்லாம் நிறைவேறினால்
ஆண்டவன் தேவையில்லை இவ்வுலகில்..
பேராசை எனக்கில்லை எப்போதும்
என் தீராத ஆசையே நீ மட்டும் தான்..
மறுநொடி கூட நிச்சயமில்லை-இன்று
ஏன் இந்தத் தீராத போராட்டம்..
அந்த ஒரு நொடி உன் கூட வாழாவிடின்
இந்த ஜென்மத்தின் புண்ணியம்
இழந்திடுவேன் நான்..
இனம் வேறு மதம் வேறு குலம் வேறு யார் ஏற்ப்பார் நமை இவ்வுலகில்..
மனம் ஒன்று குணம் ஒன்று அன்பொன்று இது அன்றில் வேறென்ன வேன்றும் இவ்வுலகில்
அன்பொன்றே போதும் என்றால் வாழ்வாரோ இத்தனை பேர் நன்றாக இப் பாரினிலே..
அன்பொன்று இவ்வுலகில் இல்லை எனில் என்றோ அடங்கிடுமே அண்டமெல்லாம்..
பணத்தை தேடும் இதயங்களின் மத்தியிலே
என் மனத்தை தேடி இழக்கிறியே உனையே நீ..
உன் குணம் கண்ட நாள் முதலாய்
ஒரு கணம் கூட மறந்தில்லை உன் நினைவை..
மறந்திடு என்கிறேன் மறுக்கிறாய் விடாபிடியாய்..
உனை மறக்க நினைத்த போதெல்லாம்
பிறந்தது உன் மேல் காதல் அதிகம்..
கானல் நீரான எம் காதலை கடந்து வந்துவிடு..
கனவில் கூட காவல் காக்கிறேன் உன் மேலான காதலை..
வலிகள் இல்லாத வாழ்க்கையை காணாய் இப்பூமியிலே..
வலியே வாழ்க்கை என்றால் தாங்குமோ என் மனம்..
அடுத்த ஜென்மத்தில் ஓடி வந்திடுவேன் உன்னோடு வாழ..
மறு ஜென்மம் என்றும் எனக்கு இல்லை. ஜென்மம் ஒன்றே போதும் உன் நினைவில் வாழ..
நினைவோடு வாழும் வாழ்க்கை நிஜமாகிடுமோ எம் வாழ்வில்..
நிஜங்கள் எல்லாம் பொய்யான இப்பாரினிலே. நினைவிலே நிம்மதி வேண்டிடுவேன்..
காதலில் வெற்றி தேல்வி சகஜமே
அன்பா..
காதலில் தோற்ற நீ எனை நினைக்காமல் ஒரு நாள் இருந்து விட்டாயானால்…..!!!